திங்கள், மே 20, 2013

நாற்பது வயது ஆகிவிட்டதா..? (கவிதை)

காலமெனும் பாதையிலே
நாற்பதினை அடைந்தாய்
கடந்து வந்த பாதையினை
கண்ணெடுத்தே பாராய்!
 
பாதிவழி வந்த பின்னர்
பாதையினை மறந்தாய்
பழகிவிட்ட நட்புகளைப்
பழுதெனவே மறந்தாய்

கண்களிலே சேர்த்துவைத்த
கனவுகளை இழந்தாய்
கைகளிலே அள்ளிவந்த
கற்பனையில் மிதந்தாய்

நூறுமலர் தேடியுறும்
வண்டெனவே பறந்தாய்
நோய்பிடித்த தென்றலெனும்
வாழ்வினிலே உழன்றாய்

சோம்பலிலே திரிந்து மனம்
சோர்ந்தழும் வீண் மனிதா,
தூங்கியது போதும் இனி
துள்ளி எழு, விரைவாய்!

இறுதி மூன்று ஓவர்களில்
எழுபது ரன் வேண்டும்-
என்பதுபோல் வேகமுடன்
இயங்கிடவே வா வா!

ஊர்வலத்தில் முதல்வனென
ஓங்கி நடை போட்டால்
உன்சுற்றம் நட்புகளும்
உனைத் தொடர்வார் அன்றோ?

நாற்பது தான் நமக்கெல்லாம்
நல்ல சுமை தாங்கி!
நடுவில் கொஞ்சம் இளைப்பாறித்
தொடர்ந்திடுவோம் பயணம்!
   -    கவிஞர் இராய. செல்லப்பா.

© Y.Chellappa
email: chellappay@yahoo.com

வெள்ளி, மே 10, 2013

இயற்கையே நீ இன்று போனதெங்கே? (கவிதை)




காலை எழுந்ததும் ஓடிவரும்

காலையைச் சொல்லிடத் தேடி வரும்

காக்கா என்றே பாடி வரும்

காகமே, நீ இன்று போனதெங்கே ? (1)


சின்னதோர் மூக்கினில் தானியங்கள்

சித்திரம் போலள்ளிச் சென்றிடுவாய்,

பெட்டை யுடனே வட்டமிடும்

சிட்டுக் குருவி, நீ போனதெங்கே? (2)


கொய்யா மரத்தினில் செம்பழங்கள்

கொய்து கடித்தே வீசிடுவாய்,

வாதுமைக் காயும் சிவந்ததடி,

பச்சைக் கிளி , நீ போனதெங்கே? (3)


மல்லிகை முல்லையும் பூத்திருக்க

மலர்ந்தே ரோஜாவும் காத்திருக்க

வாடிக்கை மறத்தல் சரியாமோ,

வண்ணத்துப் பூச்சி, நீ போனதெங்கே? (4)


காடும் கழனியும் வீடாச்சு

நாடும் நகரமும் நஞ்சாச்சு,

ஏக்கத்தில் எங்களைத் தோயவிட்டே

இயற்கையே, நீ இன்று போனதெங்கே? (5)

-கவிஞர் இராய. செல்லப்பா

© Y.Chellappa
email:chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

செவ்வாய், மே 07, 2013

அவனுக்கொரு பதில் (கவிதை)


 
நான் நானாக இருந்தபோது
நீ வந்தாய்
நீ தானே வந்தாய்?
 
நீயும் நானும்
நாமானபோது
என்னின் நானை
நான் தெரியாதவள்
உன்னின் நானை
நீ புரியாதவன்
 
உன்னிடம் எனக்குப் பிடித்ததில்
உன் மீசையும் ஒன்று
என்னிடம் பிடித்ததைச்
சொன்னதுண்டா
இன்னதென்று?
 
என்னில் பாதியும்
உன்னில் பாதியும்
இன்னொன்றானபின்,
 
‘அந்த’ இரவில் நான்
அள்ளிக்கொண்டதை
இந்தப் பகலில்
எப்படிக் கேட்கிறாய்?
 
காசு தேடலில் நீ
காலம் கழித்தாய்
கையில் மழலை என்
காலம் தின்றது
 
என்றாவது அவனுக்கு
இடுப்பு கழுவினாயா?
சீருடை திருத்தி
பொத்தான் தைத்தாயா?
 
எந்த மிஸ்சை
இவனுக்குப் பிடிக்கும்
எந்த மிஸ்க்கு
இவன் பிடிப்பான்
எந்த நண்பன்
இவனைக் கிள்ளினான்
கேட்டாயா?
 
நாளை என்ன தேர்வு,
தெரியுமா உனக்கு?
 
மாமனார் மாமியார்
மைத்துனர் நாத்தனார்
யார் பேசினாலும்
உறைக்குள் மூடிய கத்தியாய்
ஒளிவாய் நீ,
கேடயம் தாங்குவது
நானன்றோ!
 
எனக்கும் ஆசை தான்
என்னை மீட்டெடுக்க !
உனக்குள்ளிருந்து
விடுவிப்பாயா ஒருகணம்?
 
 -கவிஞர் இராய. செல்லப்பா
 

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

திங்கள், மே 06, 2013

அவளுக்கொரு கவிதை (கவிதை)


நான் நானாக

இருந்தேன்

நீ நீயாக

இருந்தாய்

 

நான் நானாக இருந்ததால்

நீ பார்த்தாய்

நீ நீயாக இருந்ததால்

நான் பார்த்தேன்

 

என் பெற்றோரும்

உன் பெற்றோரும்

பார்த்தனர்

நானும் நீயும்

நாமானோம்

 

ஆனாலும்

நீ நீயாக இருந்தாய்

நான் நானாக இருந்தேன்

 

சிறு ஊடலுக்குப்பின்

நீ நீயாகவும்

நான் நீயாகவும்

ஆனோம்

 

நான் நானாகவும்

நீ  நானாகவும்

ஆவதும் கூடும்

எதிர்வரும் நாளில்...

-    கவிஞர் இராய. செல்லப்பா

 
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 

வியாழன், மே 02, 2013

மங்களூர் மனோரமா–2,3 (இறுதிப் பகுதி)


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
மங்களூர் மனோரமா –(1)
மங்களூர் மனோரமா–2


வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை வந்தால், சனிக்கிழமை ‘கேஷுவல் லீவு’ எடுப்பது மங்களூரில் பணியாற்றும் சென்னைக்காரர்களின் மரபு. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் தொடர்ந்த விடுமுறை கிடைக்குமே! அது மட்டுமன்றி, சென்னை போகும் மெயில் பகல் இரண்டு மணிக்குக் கிளம்பும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறையை வீணாக்காமல், முதல் நாளான வியாழக்கிழமையே ‘பர்மிஷன்’ வாங்கிக்கொண்டு கிளம்பும் வசதியும் உண்டு. பொதிமாடுகளுக்கு இம்மாதிரி சிறுசிறு சலுகைகள் வழங்குவதில் எஜமானர்கள் தயங்குவதில்லை.

அப்படியான ஒரு வியாழக்கிழமை சுபதினத்தில் பகல் இரண்டு மணிக்கு மங்களூர் ரயில் நிலையத்திற்கு வந்தேன். முன்பதிவு கிடைக்காததால், கடைசிப் பெட்டியில் ஏறிக்கொண்டேன். சென்னை சேரும்பொழுது காலை ஏழு மணி ஆகிவிடும். பரவாயில்லை. மூன்று நாட்கள் குடும்பத்தோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்குமே! ஞாயிறு இரவு திரும்பிவிடவேண்டும்.